திருத்தணி நகராட்சி பகுதியில் பார் ஓ நோயால் சாகும் நாய்கள்: பாதுகாக்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி நகராட்சி பகுதிகளில் பார் ஓ என்ற வைரஸ் பாதிப்பு காரணமாக தெரு நாய்கள் உயிரிழக்கிறது. அவற்றை பாதுகாக்கவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் வெளிநாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான வீடுகளில் நாட்டு நாய்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஏராளமான தெரு நாய்களும் சுற்றி வருகிறது. இந்த நிலையில், சமீபகாலமாக பார் ஓ என்ற ஒருவித வைரஸ் பரவிவருவதால் தெருநாய்கள் உயிரிழந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏராளமான தெரு நாய்கள் இறந்துவிட்டது.

இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நாய்கள் சரிவர சாப்பிடாது. அப்படி சாப்பிட்டாலும் உடனடியாக வாந்தியெடுத்து மயங்கிவிழுந்து இறந்துவிடுகிறது. இந்த பாதிப்பு காரணமாக ஏராளமான நாய் குட்டிகளும் உயிரிழந்துவிட்டது. இந்த வைரஸ் நோயை குணப்படுத்த பார் ஓ தடுப்பூசி கடைகளில் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமையாளர்கள், பணம் கொடுத்து வாங்கி தடுப்பூசி செலுத்திவிடுகின்றனர். ஆனால் தெருவில் சுற்றும் நாய்களுக்கு தடுப்பூசி போட முடியாததால் ஆங்காங்கே உயிரிழந்து கிடக்கிறது. இது பொதுமக்களிடையே பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பார் ஓ வைரஸ் தாக்கி தெரு நாய்கள் அழிந்துவருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்தி நாய்களை பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து நாய்களும் இறந்துவிடும்’ என்றனர்.

Related Stories: