உத்தரபிரதேசத்தின் 3 மாவட்டங்களில் சிவசேனாவின் 7 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு: மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம்

புனே: உத்தரபிரதேசத்தின் 3 மாவட்டங்களில் போட்டியிடும் சிவசேனா கட்சியினரின் 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘நொய்டா, பிஜ்னோர், மீரட் மாவட்டங்களில் போட்டியிடும் எங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களில் ஏழு பேரின் வேட்புமனுக்கள் சட்டவிரோதமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கக் கூட வேட்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களும் சரியானதாக இருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். எங்கள் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள், கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கும் இருந்தது. ஆனாலும், அவர் (சாவந்த்) தனது வழக்கு விபரங்களை திருத்தி வெளியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு சாதகமாக ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது.

ஆனால் பிஜ்னோர், மீரட் மற்றும் நொய்டா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே சிவசேனா வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரித்துள்ளனர். அவர்கள் வெளியில் இருந்து வரும் அழுத்தத்தின் கீழ் வேலை செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆளும் பாஜக அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. எங்களது கட்சி உத்தரபிரதேசத்தில் சில இடங்களை கைப்பற்றும்; குறைந்தபட்சம் பாஜக வேட்பாளர்களின் தோல்வி முடிவை தீர்மானிக்கும்’ என்றார்.

Related Stories: