பசி, பட்டினி, வறுமையால் உடல் உறுப்புகள், குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்: கைகொடுத்து உதவுமா உலக நாடுகள்?

பெர்லின்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் பசி, பட்டினி, வறுமை தலைவிரித்தாடுகிறது. இதனால் வேறு வழி தெரியாத ஆப்கான் மக்கள் ஒருவாய் சோற்றுக்காக உடல் உறுப்புகளையும், பெற்ற பிள்ளைகளையும் விற்கும் கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு அமெரிக்கா வெளியேறியதும் மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். தலிபான் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காததால், அந்நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் பசி, பட்டினி, வறுமை தலைவிரித்தாடுகிறது. வேலைவாய்ப்புகள் இல்லை. வருமானத்திற்கு வழியில்லை. இதனால் சாப்பிட உணவிற்கும், அன்றாட செலவுக்கு பணமில்லாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன.

இந்நிலையில், ஆப்கான் மக்கள் பலரும் வறுமை காரணமாக தங்களின் உடல் பாகங்களையும், குழந்தைகளையும் விற்றுக் கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலை ஐநாவின் உலக உணவு திட்டத் தலைவர் டேவிட் பஸ்லி தெரிவித்துள்ளார். ஒருவாய் சோறுக்கு பலர் தங்களின் சிறுநீரகங்களையும் விற்றுள்ளனர். 5 வயது, 10 வயது குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் விற்கிறார்களாம். இது குறித்து பஸ்லி கூறுகையில், ‘‘ஆப்கானில் தற்போது சுமார் 4 கோடி மக்களில் 2.3 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

வேறு வழியாத மக்கள் பலரும் சிறுநீரகங்களையும், பெற்ற குழந்தைகளையும் விற்றுள்ளார்கள். இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 97 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லக் கூடிய அபாய நிலை உள்ளது’’ என்றார். எனவே உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டுமென ஐநா மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளது. ஓஸ்லாவில் சமீபத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* 50,000 டன் கோதுமை, 3.6 டன் மருந்து: இந்தியா உதவி

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 50,000 டன் கோதுமை மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்க இந்திய அரசு அனுமதி தந்துள்ளது. இவை பாகிஸ்தான் வழியாக சாலை போக்குவரத்து மூலம் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் இருந்த போதிலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் சம்மதித்துள்ளன. இதன்படி, 50,000 டன் கோதுமை மற்றும் 3.6 டன் மருத்துவ உதவிகளை அனுப்பும் பணி பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: