நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 53 பார்வையாளர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்த 33 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் என 53 அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெற உள்ளது.  

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர கடைபிடித்தும், அமைதியான முறையில் தேர்தலை நடத்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல், மாவட்டங்கள் தோறும் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

 சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை சோதனை செய்யப்பட்டு பின்னரே மாவட்டங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. நேர்மையான முறையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

 மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்டங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள்/ மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த 33 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சி.என்.மகேஸ்வரன், வி.தட்சிணாமூர்த்தி, எம்.லட்சுமி, அஜய் யாதவ், நிர்மல்ராஜ், கோவிந்த ராவ், ஜான் லூயிஸ், மகேஸ்வரி ரவிக்குமார், ரத்னா, கிளாட்ஸ்டோன் புஷ்பா ராஜ், வளர்மதி, பிரதீப் குமார், கற்பகம், கணேசன், கோவிந்த ராவ், பிரியங்கா, அருண் ராஜ், சாந்தி,சங்கீதா, பிருந்தா தேவி, வந்தனா கார்க், பத்மராஜா, ஆனந்த் மோகன், நிஷாந்த் கிருஷ்ணா, சிவகிருஷ்ண மூர்த்தி, பாலச்சந்தர், வைத்திநாதன், பிரதாப், பிரவீன்குமார்,மதுபாலன், பூங்கொடி, தங்கவேலு, சங்கர் ஆகிய 33 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், வி.ஆர்.சுப்புலட்சுமி, ரத்தினசாமி, சதீஷ், கவிதா, ரேவதி, பிரியா, இந்துமதி, காளிதாஸ், சாந்தி, மதுமரி, ஜெயஸ்ரீ, மீனாட்சி சுந்தரம், மங்கலம், ரவிச்சந்திரன், ஜானகி, சரவணன், ராஜேந்திரன், சரவணமூர்த்தி, சிவருத்ரையா, சக்திவேல் ஆகிய 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் என மொத்தம் 53 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல் பணிகளை தொடங்குவார்கள் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

* தேர்தலுக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 33 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை தொடங்குவார்கள்.

Related Stories: