வெளிமாநில நோயாளிகள் அவதி: ஜிப்மர் நுழைவு வாயிலில் வழிகாட்டி குழு அமைக்கப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மருக்கு தினமும் வெளிமாநில நோயாளிகள் அதிகளவில் வந்து ஏமாற்றமடைந்து செல்லும் நிலையில் அதன் நுழைவு வாயிலில் வழிகாட்டி குழுவை அமைத்து நோயாளிகளுக்கான சிரமங்களை தடுக்க நிர்வாகம் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகிரித்த நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் கடந்த 19ம்தேதி முதல் அங்கு தொலைபேசி மூலம் முன்பதிவு செய்த நோயாளிகளே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் தினசரி முன்பதிவு செய்த 50 நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவ்விவரம் தெரியாமல் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் அதிகளவில் நோயாளிகள் ஜிப்மருக்கு வந்து செல்கின்றனர். முன்பதிவு செய்தவர்களை மட்டுமே டாக்டர் ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்க ஊழியர்கள் அனுமதிக்கின்றனர். இதனால் ஏற்கனவே தொடர் சிகிச்சை பெற்று வந்த வெளி மாநிலத்தினர் விபரம் தெரியாமல் மருந்து, மாத்திரை வாங்கவந்து உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலம் உள்ளது.

இதனிடையே வெளிமாநிலத்தவருக்கு இவ்விவகாரம் தெரியாததால் முன்பதிவு செய்யாத   நோயாளிகளை வழிநடத்துவதற்கு ஏதுவாக ஜிப்மர் நுழைவு வாயிலில் வழிகாட்டி குழு அமைக்க   ஜிப்மர் நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் பட்சத்தில் ஜிப்மரில் மீண்டும் பழைய முறைப்படி சிகிச்சைகள்   மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Related Stories: