பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை சுத்தியலால் அடித்து கொன்ற மனைவி: விசாரணை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைத்த போலீசார்

பெரம்பூர்: பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை சுத்தியலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரம்பூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கொலை வழக்கு பதிந்த போலீசார், கைது செய்து சிறையில் அடைக்காமல், வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை ஓட்டேரி புதிய வாழைமா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). இவரது மனைவி ப்ரீத்தா (41). தம்பதிக்கு, 20 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள், தனியார் கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். மகன், 6ம் வகுப்பு படித்து வருகிறார். பிரதீப் வேலைக்கு செல்லாமல், பெற்றோருக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருவாயை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

 பிரதீப்  அடிக்கடி குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம்  இரவு 10 மணியளவில் போதையில் வீட்டிற்கு வந்த  பிரதீப், அனைவரும் தூங்கிய பிறகு, இரவு 11 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த தனது 20 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ப்ரீத்தா, கணவனை கண்டித்து, வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது பிரதீப், மனைவியை திட்டி, பலமாக தாக்கியுள்ளார். மேலும், அவரை கீழே தள்ளி விட்டு அவர் மீது நாற்காலியை தூக்கி வீசியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த மகனையும் பிரதீப் பலமாக தாக்கியுள்ளார்.

பின்னர், மீண்டும் தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் வேறு வழியின்றி ப்ரீத்தா வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து வந்து, பிரதீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பிரதீப் சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து உயிரிழந்தார். உடனே செய்வதறியாது தவித்த ப்ரீத்தா மற்றும் அவரது  மகள், மகன் கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிரதீப் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ப்ரீத்தாவை காவல் நிலையம் அழைத்து சென்று, கொலை வழக்கு பதிவு செய்தனர்.

 விசாரணையில், வழக்கமாக மேல் வீட்டில் உள்ள தாத்தா பாட்டியுடன் எனது மகள் படுத்து உறங்குவது வழக்கம். அவர்கள் ஊருக்குச் சென்று இருந்ததால், மகள் என்னுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். போதையில் வந்த எனது கணவர் எனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றபோது, அதை தடுக்க பலமுறை போராடியும் முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி நான் சுத்தியலை எடுத்து மண்டையில் அடித்து விட்டேன், என்று ப்ரீத்தா கூறியுள்ளார். மேலும் கணவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு, அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார், எனவும் கூறியுள்ளார். மகளை காப்பாற்ற தற்காப்புக்காக தாக்கியபோது கணவர் இறந்த நிலையில், இதுகுறித்து போலீசார்  கொலை வழக்கு பதிவு செய்தாலும், ப்ரீத்தாவை சிறைக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: