காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை: அமாவாசையை எதிர்பார்க்கும் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜன.28) தொடங்கியது. முதல் நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வேட்பாளரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெறும். இதையொட்டி, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்க உள்ளது. 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும்.

7ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள். இதைதொடர்ந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்ய முதல் நாளான நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர். ஆனால், யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாளை மறுநாள் (31ம் தேதி) அமாவாசை என்பதால், அன்றைய தினம் முக்கிய அரசியல் கட்சியினர் உள்பட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய மண்டலம் வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் போலீசார் காலை 7 மணிமுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிகளில் சிசிடிவி காட்சி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

Related Stories: