வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் கைது

அண்ணாநகர்: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சிவா (22). இவர், அண்ணாநகரில் தனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 22ம் தேதி தனது நண்பர் சிலம்பரசன் (18) என்பவருடன் அண்ணாநகர் 12வது பிரதான சாலையில் சிவா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்கு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கும்பல், சிவாவை வழிமறித்து கத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததை பார்த்ததும் 4 பேர் கும்பல் தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சிவாவை அண்ணாநகர் போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் குறித்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டு அயனாவரம் பகுதியை சேர்ந்த கிருபா (23) என்பவரை சிவா தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கிருபா மற்றும் அவரது 3 கூட்டாளிகள் சேர்ந்து சிவாவை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.  இந்நிலையில், நேற்று மாலை இவ்வழக்கு தொடர்பாக அண்ணாநகர் பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை இன்ஸ்பெக்டர் ரிஜிஷ்பாபு, எஸ்ஐ செல்லதுரை தலைமையிலான தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அண்ணாநகர், அன்னை சத்யா நகரை சேர்ந்த ரவுடிகள் ராபர்ட் (23), இவரது தம்பி ஜோசப் (20), குட்டி (20) எனத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 3 பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி கிருபா (எ) கிருபாகரனை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: