நெல் உமி, தேங்காய் நார் கழிவுகளை கொண்டு டீ கப், தட்டு, கண்டெய்னர் தயாரித்து அசத்தல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில், நெல் உமி, கோதுமை உமி, கரும்பு சக்கை, வேர்கடலை ஓடுகள், தேங்காய் நார் போன்ற எளிதில் மக்கும் வேளாண் கழிவுகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட டீ கப், தட்டு, கண்டெய்னர், ஸ்பூன் போன்றவற்றை ஊட்டி இளைஞர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் பொருட்களில் செய்யப்பட்ட கப்புகள், வாழை மட்டையில் செய்யப்பட்ட தட்டுக்கள் போன்றவற்றை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இருப்பினும் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிந்தபாடில்லை.ஊட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நெல் உமி, கோதுமை உமி, கரும்பு சக்கை, வேர்கடலை ஓடுகள், தேங்காய் நார், வாழை தார் தண்டு, புளியங்கொட்டை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த கழிவுகளை கொண்டு டீ கப்புகள், ஸ்பூன்கள், தட்டுகள், கண்டெய்னர்கள் போன்றவற்றை நீலகிரியில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி பிஸ்கட் கப்புகள், தட்டுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஊட்டியில் பல்வேறு கடைகளிலும், பெரிய பெரிய ஓட்டல்களிலும் வேளாண் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட கப்புகள், தட்டுகள் போன்றவற்றை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஊட்டியில் இதற்கென தனியார் உற்பத்தி மையத்தை அமைத்து விரைவில் உற்பத்தியை துவங்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அறிமுகப்படுத்தியுள்ள இளைஞர்களில் ஒருவரான செந்தில்குமார் கூறுயதாவது: நீலகிரி மாவட்டம் சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது.

இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில், மாற்று பயன்பாட்டு பொருட்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேளாண் சார்ந்த கழிவுகளை கொண்டு கப்புகள், தட்டுகள் போன்றவற்றை நீலகிரியில் அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும் பிஸ்கட் கப்புகளையும் செய்துள்ளோம். பிஸ்கட் என்பதால் இதனை பயன்படுத்திவிட்டு அப்படியே சாப்பிட்டு விடலாம்.

இதேபோல் வேளாண் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்திவிட்டு வீசி எறிந்தாலும் 24 மணி நேரத்திற்குள் அவை மக்கிவிடும். இதனால் இவை மற்ற பிளாஸ்டிக் குப்பைகள்போல் மலைபோல் குவிந்து விட கூடிய சூழலும் ஏற்படாது. வேளாண் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது என்பதால் கால்நடைகள் உட்கொண்டாலும் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வேளாண் கழிவுகளும் மிக குறைந்த விலையில் கிடைப்பதால், கொள்முதல் செலவும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. கப்புகளை ரூ.1க்கு விற்பனை செய்கிறோம். தற்போது ஊட்டியில் சில ஓட்டல்கள், சிறு வணிக நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர், என்றார்.

Related Stories: