மாமல்லபுரத்தில் பேருந்தில் மீன்கூடையுடன் ஏற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தை சேர்ந்த கடும்பாடி என்பவரின் மனைவி செல்லம்மாள் (55), மீன், இறால், நண்டுகளை கூடையில் வைத்து தாம்பரம், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் சென்று, தெருத் தெருவாக சுற்றி விற்பனை செய்வது வழக்கம்.

நேற்று காலை வழக்கம் போல் மீன்கூடையுடன் விற்பனைக்காக மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்னை செல்லும் அரசு பேருந்தில் செல்லம்மாள் ஏறினார். அப்போது நடத்துநர், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் திட்டி, பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டார். அதற்கு செல்லம்மாள், பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம். மீன்கூடையுடன் ஏறக்கூடாது என்றால் எப்படி என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நடத்துநர், என் பேருந்தில் உன்னை ஏற்றமாட்டேன். இதுபற்றி யார்கிட்ட வேணாலும் புகார் அளித்து கொள் என அடாவடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் குறித்த நேரத்தில் மீன்களை கொடுக்கவில்லை என்றால் அழுகி வீணாகிவிடுமே என்ற கவலையில் செல்லம்மாள் கதறி அழுது நடத்துநரிடம் கெஞ்சி கேட்டும், அவரை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அரசு பேருந்தில் மீன்கூடையுடன் செல்ல பெண்ணுக்கு அனுமதி மறுத்து, தகாத வார்த்தைகளில் பேசிய நடத்துநர் மீது துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொக்கிலமேடு மீனவ கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: