பள்ளிப்பட்டில் இரட்டை கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஆளில்லாத வீட்டில் கொள்ளையடித்த அதேவேளையில் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணிடம் தங்கசெயினை பறித்த சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக சில வீடுகள் அமைந்துள்ளன. இங்கு 25 ஆம் தேதி இரவு, சாமிதுரை - சாரதா என்ற தம்பதியர்களின் ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்கநகை மற்றும் ரூ.25,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் மறுநாள் வீட்டிற்கு வந்த தம்பதிக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதே நேரத்தில், அருகாமையில் வசித்து வரும் சங்கீதா என்ற பெண்ணின் வீட்டிற்கும் 2 மர்மநபர்கள் சென்றதாக தெரிகிறது. அப்போது வீட்டில் சங்கீதாவும், அவரது தாயாரும் கதவை தாளிடாமல் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் சங்கீதாவின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கசெயினையும், அவரது தாலிக்கயிற்றையும் பறிக்க முயன்றுள்ளனர். திடீரென இருவரும் தங்செயினையும், தாலிக்கயிற்றையும் பறிப்பதை உணர்ந்த சங்கீதா சட்டென இரண்டு கைகளால் அதனை இறுக்கமாக பற்றிக்கொண்டுள்ளார். இருப்பினும் மர்மநபர்கள் வேகமாக இழுக்க தாலிச்செயினும், தாலிக்கயிறும் அறுந்து போனது.

அதில் அரைபவுன் மதிப்பில் உள்ள தாலி மற்றும் மஞ்சள்கயிறு சங்கீதாவின் கையில் நின்றுபோக, ஒன்றரை சவரன் மதிப்புள்ள தங்கச்செயின் மர்மநபர்களின் கையில் சிக்கியது. அதை எடுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த 2 கொள்ளைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், தியாகதுருவம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஒரே பகுதியில் நடந்த இரட்டை கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.       

Related Stories: