பழநி மலைக்கோயிலில் எடப்பாடி பக்தர்கள் 300 கிலோ பூக்களில் மலர் வழிபாடு

பழநி: பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 300 கிலோ பூக்கள் கொண்டு எடப்பாடி பக்தர்கள் மலர் வழிபாடு செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் தைப்பூச திருவிழா ஜன. 12ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தது. தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். 362 ஆண்டுகளாக இக்காவடி குழுவினர் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு பழநி அருகே மானூர் சண்முகநதி ஆற்றிற்கு வந்தடைந்தனர். நேற்று ஆற்றில் குளித்து விட்டு ஊர்வலமாக பழநி மலைக்கோயிலுக்கு வந்தனர். இவர்களுக்காக அடிவார பகுதியில் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. கொரோனா காரணமாக 500 பேர் மட்டுமே பழநி மலைக்கோயிலில் இரவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இக்குழுவின் சார்பில் மலைக்கோயிலில் சுமார் 300 கிலோ அளவுள்ள சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, ரோஸ், மரிக்கொழுந்து, மருது, மல்லி, ஆஸ்திரேலியா பூ ஆகியவற்றை கொண்டு ஓம், சரவணபவ, தாமரைப்பூ வடிவங்கள் வரைந்து, தீப ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.மலைக்கோயிலில் 60 படிகளுக்கு மஞ்சள் தெளித்து பத்தி, சூடம் ஏற்றி படிபூஜை நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: