குடியரசு தினவிழா விடுமுறை எதிரொலி சுற்றுலா பயணிகளால் களை கட்டிய ஒகேனக்கல்: பரிசல் சவாரி செய்து குதூகலம்

பென்னாகரம்: குடியரசு தின விழா விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து அருவிகளின் அழகை கண்டு ரசித்தனர். தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளமாக ஒகேனக்கல் திகழ்ந்து வருகிறது. விடுமுறை மற்றும் விழா காலங்களில் தமிழகம் மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்காண சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் வரவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று 3வது அலை பரவல் காரணமாக, தமிழக அரசு ஞாயிறுதோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று குடியரசு தின விடுமுறையையொட்டி வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்தும், மீன் சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக, மாவட்ட நிர்வாகத்தால் அருவிகளில் குளிக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தடை நீடித்து வருவதால், அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒகேனக்கல் போலீசார் மேற்கொண்டனர். இந்த வார ஞாயிறு ஊரடங்கில் தளர்வு கிடைத்தால், அனைத்து கடைகளிலும் வியாபாரம் மற்றும் மீன் விற்பனை அமோகமாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: