மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவு: இன்னும் தொடங்காத பணி! :மத்திய அரசின் ஓரவஞ்சனைக்கு ஓர் உதாரணம்!!

மதுரை : 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மத்திய பட்ஜெட்டில் பலத்த மேஜை தட்டல்களுடன் அறிவிக்கப்பட்டது தமிழகத்திற்கான எம்ய்ஸ் திட்டம். தரம்  வாய்ந்த மருத்துவமனை தமிழகத்திற்கு கிடைத்துவிட்டதாக பா.ஜ மட்டுமல்ல, பிற கட்சிகளும் கொண்டாடி வந்தது. ஆனால்  அறிவித்து 6.5 ஆண்டுகள் கடந்தும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.? மத்திய அரசால் தமிழகம்  வஞ்சிக்கப்படுவதற்கு மிகச்சிறந்த உதாரணம் மதுரை எய்ம்ஸ். ஆம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24  ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தோப்பூரில் இருந்து மண் மாதிரிகள் நாக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் இந்த இடம் எய்ம்ஸ்  மருத்துவமனைக்கான கட்டிடம் கட்ட ஏற்றது என தெரியவந்தது. மத்திய அரசின் மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவன அதிகாரிகள் இடத்தை  பார்வையிட்டனர்.கட்டுமான பணிகளுக்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019, ஜன.  27ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி திமுகவினர் கேள்வி எழுப்பினர். “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது.இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ஆனால், தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிற மருத்துவமனை கட்டுமானப்பணி ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories: