‘நெல்லை வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும்’ நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் பேட்டி

நெல்லை: அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்று அதிமுக எம்எல்ஏக்களை விமர்சித்த நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து போட்டியிட வேண்டும். அவர் நெல்லைக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டப்படுமென அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் கூறினார். தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜ சார்பில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் நடந்தது. இதில் பேசிய பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘‘‘தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அதிமுக எம்எல்ஏ ஒருவரைக் கூட பார்க்கவில்லை என்று கூறினார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு 50 வருடங்களாகும் அதிமுக, இன்று இந்தியாவில் மாபெரும் அரசியல் இயக்கமாக திகழ்கிறது. இந்த இயக்கத்தில் அமைச்சராக, 3 முறை எம்எல்ஏவாக பதவி வகித்து, தற்போது அதிமுக தயவால் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், அதிமுக எம்எல்ஏக்களை பற்றி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நெல்லையில் பாஜவுக்கு என்று தனியாக ஓட்டு வங்கி கிடையாது. அதிமுக தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி நயினார் நாகேந்திரனை வெற்றி பெற வைத்தனர்.

பாஜவுக்கு சென்ற நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசி வெளிநடப்பு செய்துள்ளார். ஆனால் சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன்  பேசுவதில்லை. வானதி சீனிவாசன் தான் பேசுகிறார். எனவே அதிமுக தயவால் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனித்துப் போட்டியிட வேண்டும். அதிமுக தயவு இல்லாமல், தமிழகத்தில் பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. நயினார் நாகேந்திரன் நெல்லைக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: