மழை வெள்ளம் பாதிப்பால் கடுக்கலூர் சாலை 5 அடி சரிந்து சேதம்: மேம்பாலம் அமைக்க கோரிக்கை

செய்யூர்: மதுராந்தகம் அருகே கடுக்கலூரில் மழை வெள்ளத்தின் காரணமாக சாலை அரிப்பு ஏற்பட்டு, சாலையோரத்தில் சுமார் 5 அடிக்கு சரிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் அருகே சூனாம்பேட்டில் இருந்து செய்யூர் செல்லும் நெடுஞ்சாலையில் கடுக்கலூர் கிராமம் உள்ளது. இச்சாலை வழியாக அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.  

இந்த சாலையோரம் ஓடை பகுதி அமைந்துள்ளது. ஆண்டு தோறும் மழைக்காலங்களில் இந்த ஓடையில் இருந்து வெளியேறும் மழைநீர், இங்குள்ள பயிர் நிலங்களை அழிப்பதோடு, நெடுஞ்சாலையையும் மூழ்கடித்து செல்லும். அப்போது, நெடுஞ்சாலையோரத்தில் அரிப்பு ஏற்பட்டு, சுமார் 4 அடி முதல் 6 அடி வரை அபாய பள்ளம் ஏற்படும். இதனை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைத்தாலும், மீண்டும் மழைக்காலங்களில் சாலை சேதமடைவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், இந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

சாலையோரத்தில் சரிவு ஏற்பட்டு சுமார் 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். அங்கு மின்விளக்கு இல்லாமல், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், மேற்கண்ட பகுதியில் சிறிய மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: