மஞ்சூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: வாழைகளை நாசம் செய்வதால் விவசாயிகள் அதிருப்தி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை, முள்ளி, மானார், அத்திகடவு, மேல்முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை சுற்றிலும் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பில் வாழை மற்றும் மலைகாய்கறிகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் இப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் யானைகள் கூட்டமாக புகுந்து வாழை மற்றும் காய்கறி பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் மானார் பகுதியில் சுமார் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை தோட்டத்தை காட்டு யானைகள் முற்றிலுமாக சூறையாடின. காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. காட்டு யானைகள் விளை நிலங்களில் நுழைவதை தடுக்க விவசாயிகள் தோட்டங்களில் தகரங்களை தட்டி ஒலி எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் யானைகளை விரட்டி வருகின்றனர். மேலும் பலர் தங்களது தோட்டங்களில் உள்ள பெரிய மரங்களின் மீது பரன்களை அமைத்து இரவு முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து குடிசைகள், ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் தொழுவங்களையும் யானைகள் இடித்து சேதப்படுத்துகின்றது. காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: