தஞ்சையில் எம்ஜிஆர் சிலை சேதம்: போதை வாலிபர் கைது

தஞ்சை: தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை வடக்குவீதி பகுதியில் சாலையோரத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த சிலை திடீரென மாயமானது. அப்பகுதி வழியாக சென்றவர்கள், சிலை இல்லாததால் கடும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து சிலையை அதிமுகவினர் தேடிய போது பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் அதிமுகவினர் வைத்தனர்.

இதுதொடர்பாக அதிமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் மேற்கு போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் போதையில் சிலையை உடைப்பது தெரியவந்தது. விசாரணையில், தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சேகர் (40) என்பதும், அவர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சேகரை கைது செய்தனர்.

Related Stories: