தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் ,சூரிய மின்சக்தி மையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி மையத்தை திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை தொடங்கி வைத்தார். உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டுவரும் வகையிலும், கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. தமிழக அரசின் கல்வி குறித்த பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் சிறப்பான செயல்பாடுகளும் இதற்குக் காரணம்.

2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம், அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்றும், இந்நிறுவனம், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் உள்ள அரசு சார்ந்த முகமைகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும்” என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆளில்லா விமானங்களை, பேரிடர் மேலாண்மை, விவசாயம், கட்டுமான கண்காணிப்பு, வரி திட்டமிடல், சுகாதாரம், வானவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற அரசு துறைகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள டாக்டர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையமானது சமூக பயன்பாடுகளுக்கான ஆளில்லா விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

மேலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 1 மெகாவாட் சூரிய மின்சக்தி மையத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 15 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 36 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா வான்வழி வாகனக் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், ஆளில்லா வான்வழி வாகனத்தின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் க.லட்சுமிபிரியா, இ.ஆ.ப., கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் சி.பூரணசந்திரன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ஆர். வேல்ராஜ், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் தாமரைச்செல்வி சோமசுந்தரம், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, பேராசிரியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: