நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது உண்மை தான்: விசாரணைக்கு ஆஜரானவர் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது உண்மைதான் என்று, நடிகர் திலீப்புடன் சேர்ந்து விசாரணைக்கு ஆஜரான ஒருவர் கூறியதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் உள்பட 5 பேர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை 4 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் நீதிபதி கோபிநாத், நேரடியாக விசாரணை நடத்தினார்.

அப்போது திலீப் உள்பட 5 பேரிடமும், ஜனவரி 23 முதல் 25ம் தேதி வரை 3 நாள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் விசாரணை நடத்தலாம். 27ம் தேதி வியாழக்கிழமை விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை திலீப் உள்பட 5 பேரையும் கைது செய்யக்கூடாது என்று நீதிபதி போலீசுக்கு தெரிவித்தார். அதன்படி நேற்று காலை 8.55 மணியளவில் நடிகர் திலீப் அவரது தம்பி அனூப், தங்கை கணவர் சூரஜ், டிரைவர் அப்பு, நண்பர் பைஜு ஆகியோர் கொச்சி குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

அவர்களிடம் குற்றப்பிரிவு ஏடிஜிபி ஜித், எஸ்பி மோகனசந்திரன் தலைமையில் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இரவு 8 மணி வரை 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணைக்கு திலீப் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீசாரின் பல கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறினார். இதனால் இன்றும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் விசாரணை தொடர்பான தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகி உள்ளன. டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல திலீப் வீட்டில் சதி திட்டம் நடந்தது உண்மை தான் என்று விசாரணைக்கு ஆஜரான 5 பேரில் ஒருவர் கூறியுள்ளார். டைரக்டர் பாலசந்திரகுமார் கூறியது போன்ற விஷயங்கள் குறித்து திலீப்பின் வீட்டில் பேசப்பட்டது உண்மைதான்.

அப்போது தான் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் சதி திட்டத்தில் தான் பங்கேற்கவில்லை. எனவே கூடுதல் தகவல் எதுவும் தெரியாது என்று அந்த நபர் கூறியுள்ளார். இவ்வாறு கூறியது யார்? என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. போலீசுக்கு தேவையான தகவல் கிடைத்து விட்ட போதிலும், இந்த வாக்குமூலம் போலீசுக்கு உதவியாக இருக்கும் என்று கூற முடியாது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று முதல் 3 நாட்களும் விசாரணை நடத்திய பின்னர் அவர்களை விட்டுவிட வேண்டும். இதன்பிறகு 5 பேரும் கண்டிப்பாக ஒன்றாக சந்திப்பார்கள். அப்போது ஒருவருக்கொருவர் போலீசிடம் என்ன விவரங்களை கூறினார்கள் என்று பேச வாய்ப்பு உண்டு.

மறுநாள் அதை வைத்து மாற்றி வாக்குமூலம் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு என போலீசார் கருதுகின்றனர். இதை முறியடிக்க என்ன செய்வது என்ற ஆலோசனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் அவர்கள் வாக்குமூலத்தை மாற்றவும் வாய்ப்பு உண்டு என்பதும் போலீசுக்கு சிக்கலை ஏற்படுத்த கூடும். இதற்கிடையே நடிகர் திலீப் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று அவரது விளக்கத்தில் இருந்த முரண்பாடுகள் குறித்து போலீசார் கேட்டபோது பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

கொச்சி குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று 2வது நாளாக திலீப் உள்பட 5 பேரும் காலை 8.55 மணிக்கு ஆஜரானார்கள். தொடர்ந்து குற்றப்பிரிவு எஸ்பி மோகன சந்திரன் தலைமையில் 5 குழுக்கள் தனித்தனியாக 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திலீப் உச்சநீதிமன்றத்தில் மனு

நடிகை பலாத்கார வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து விசாரணை நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தான் டைரக்டர் பாலசந்திரகுமார் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் கேட்டு கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

 இந்த நிலையில் விசாரணையை நீட்டிக்க கூடாது என்று கூறி திலீப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: