ஒமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும்!: 4வது அலை இந்தியாவில் இருக்காது என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை..!!

டெல்லி: ஒமிக்ரான் தொற்று பரவல் கொரோனாவுக்கு முடிவு கட்டும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் அமைதியாக, அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இது அரசுகளையும், மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் லேசான மற்றும் அறிகுறியற்றதாக இருந்தாலும் தற்போதைய அலையில் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒமிக்ரான் அலையால் கொரோனாவே முற்றிலும் முடிவுக்கு வரும் என புனேவை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர், ஸ்பானிஸ் காய்ச்சலை போலவே கொரோனாவிலும் முதல் அலை லேசாகவும், இரண்டாவது அலை கொடூரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலைக்கு பிறகு ஸ்பானிஸ் காய்ச்சல் மிகவும் லேசாக அதாவது சாதாரண ஜலதோஷம் போலவே மாறியதாக கூறினார். அதைப்போலவே கொரோனாவின் 3வது அலையும் இரண்டாவது அலையை விட லேசாகவும், அதிக பாதிப்பு இல்லாமலும் மாறியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பிறகு இந்தியாவில் 4வது அலை இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: