கொரோனா 3வது அலை காரணமாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக சரிவு

சேலம்: கொரோனா நோய் தொற்று 3வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால், வெளியூர்களுக்கு செல்வதை மக்கள் குறைத்துக் கொண்டுள்ளனர். இதன்காரணமாக கடந்த 10 நாட்களாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக குறைந்துள்ளது. வழக்கமாக வார நாட்களில் 80 முதல் 100 சதவீத பயணிகளும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 100 சதவீத பயணிகளும் சென்று வந்தனர். ஆனால், இதுவே தற்போது முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் வார நாட்களில் 60 சதவீதத்திற்கு கீழ் தான் பயணிகள் பயணிக்கின்றனர்.

சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்களில் மட்டும் வார இறுதி நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவை எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி, மங்களூரு எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், எழும்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் வார இறுதி நாட்களில் மட்டும் நிரம்பிச் செல்கிறது. மற்ற நாட்களில் 60 சதவீத பயணிகளே பயணிக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், மக்கள் ரயில்களில் செல்வதை தவிர்த்துள்ளனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 10 நாட்களாக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக சரிந்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் மக்கள் பழையபடி பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றனர்.

Related Stories: