கோவாவில் துண்டுகளாக உடையும் பாஜக: கட்சி தலைமை கலக்கம்..!

பனாஜி: கோவாவில் பாரதிய ஜனதா கட்சியில் சிறிய சிறிய துண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சரும் அந்த கட்சியின் மூத்த தலைவருமான லட்சுமிகாந்த் பர்சேகர் கட்சியில் இருந்து விலக போவதாக அறிவித்திருப்பது கட்சி தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 64 வயதான லட்சுமிகாந்த் பர்சேகர் கோவாவின் மாண்ட்ரெம் தொகுதியில் 2002 - 2017 ல் எம்எல்ஏவாக இருந்தவர். அத்துடன் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சரவைக்கு அழைக்கப்பட்ட போது 2014 - 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஆனால் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள லட்சுமிகாந்த் பர்சேகர், தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களம் கண்டு தலைமைக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். தனக்கு சீட் வழங்காததால் கடும் கோபம் அடைந்த பொதுப்பணித்துறை அமைச்சர் தீபக் புஷ்கர், தனது எம்எல்ஏ பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். கோவா துணை முதலமைச்சரின் மனைவியான சாவித்ரி கவ்லேகர் பாஜக மகளிரணி துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் சுயேட்சையாகவும் களம் காண்பதாகவும் அவர் அறிவித்தார். மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால், கட்சியில் இருந்து விலகியதுடன் சுயேட்சே வேட்பாளரானார். இது பாரதிய ஜனதாவை பெறும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: