தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித்  தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும் என்று செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும்  விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை,  பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கலைஞரால்  தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட 16.586 ஏக்கர் நிலத்தில், ரூ.24.65  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன  கட்டடத்தை பிரதமர் 12.1.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாகத்  திறந்து  வைத்தார். கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.7.2008  அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்துக் ‘கலைஞர்  மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை  நிறுவினார்.

இந்த  அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்  விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளை துவங்கப்பட்ட பின் 2009ம்  ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ  பர்ப்போலாவிற்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்  செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. செம்மொழித்  தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி  செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு  வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்  8வது ஆட்சிக்குழுக்  கூட்டம் 30.8.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2010ம் ஆண்டு முதல்  2019ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு.கருணாநிதி  செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் மீது ஒப்புதல்  பெறப்பட்டது.

அதன்படி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர்  மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.  விழாவில், 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி  செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதுகளை வழங்கிய பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் - குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல,  ஒரு  பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது. சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள  பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை  2008ம் ஆண்டு சூன் 30ம் நாள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் திறந்து  வைத்தார். செம்மொழிநிறுவனத்துக்கு எனத் தனியாக ஒரு கட்டடம் அமைய வேண்டும்  என்று தலைவர் கலைஞர் ஆசைப்பட்டார். அதற்காக 2007ம் ஆண்டு நவம்பர் 5ம் நாள்  சென்னை பெரும்பாக்கத்தில் 16 ஏக்கர் நிலத்தை வழங்கினார். சுமார் ₹1  கோடியே 45 லட்சம் மதிப்பில் அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம். அந்த  இடத்தில் ₹24 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய அரசு மாபெரும்  கட்டடம் அமைத்துத் தந்துள்ளது. கடந்த 12ம் தேதி அந்தக் கட்டடத்தை பிரதமர்  நரேந்திரமோடி திறந்து வைத்திருக்கிறார்.

செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி  வருகிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு, 2008ம் ஆண்டு ஜூலை 24ம்  நாள், தனது சொந்த நிதியில் இருந்து ₹1 கோடியை முத்தமிழறிஞர் தலைவர்  கலைஞர் வழங்கினார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’  என்ற பெயரால் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில்  தகுதிசால் தமிழறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று முத்தமிழறிஞர்  கலைஞர் விரும்பினார். இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக, பத்து லட்சம்  ரூபாய் பரிசுத் தொகை கொண்டது இந்த விருது. பாராட்டு இதழும், முத்தமிழறிஞர்  கலைஞரின் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படும்.முதல் விருது  2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்,  அன்றைய குடியரசுத் தலைவரால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்  அஸ்கோபார்ப்போலாவிற்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த  விருதைத் தொடர்புடைய அரசுகள் வழங்கி இருக்க வேண்டும். தமிழுக்கு,  தமிழறிஞர்களுக்குச் செய்ய வேண்டிய பாராட்டுகள், மரியாதையில் கூட அரசியல்  புகுந்ததன் காரணமாக, 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த விருதுகள்  வழங்கப்படவில்லை. கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு விருதாளர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.  இந்த விழாவில் சில அறிவிப்புகளை நான்  வெளியிட விரும்புகிறேன்.

* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்  புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி  “செம்மொழி சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.

* செம்மொழிச்  சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத்  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ்  இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

இந்த மொழி  குறித்த ஆய்வுகள் தமிழ்நாட்டோடு, இந்திய எல்லையோடு முடிந்துவிடாமல்  உலகளாவியதாக அமைய வேண்டும். உங்களது ஆய்வுகள் அறிவுப்பூர்வமானதாக  மட்டுமில்லாமல் உணர்வுப்பூர்வமானதாகவும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால்  உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் தேடி வரக்கூடிய  இடமாகச் செம்மொழித்  தமிழாய்வு மத்திய நிறுவனம் நிச்சயமாக மாறும். எங்கும் தமிழ்,  எதிலும் தமிழ் என்று பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில், முத்தமிழறிஞர்  தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையோடு நடைபோடும் நமது அரசு, தமிழை  ஆட்சிமொழியாகவும் வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட தொடர்ந்து குரல்  கொடுக்கும். விழாவில், அமைச்சர்கள்  துரைமுருகன், க.பொன்முடி,  தங்கம் தென்னரசு,  மா.சுப்பிரமணியன்,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  எம்.எல்.ஏக்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, க.கணபதி,  தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய  நிறுவன துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர்  ரா.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விருது பெற்றவர்கள் விவரம்

2011 - பேராசிரியர் பொன்.கோதண்டராமன் ( முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

2012 - பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

2013- பேராசிரியர் ப.மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர்,  புதுவைப் பல்கலைக்கழகம்).  

2014 - பேராசிரியர்  கு.மோகனராசு (முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

2015 - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை)

2016- கா.ராஜன் ( முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)

2018- கவிஞர் ஈரோடு தமிழன்பன் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை)

2019- பேராசிரியர் கு.சிவமணி (முன்னாள் முதல்வர்,  கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை) ஆகிய விருதாளர்களுக்கு விருதுடன் ₹10 லட்சம்  பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதி திருவுருவச்சிலையும் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார். 2010ம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் வீ.எஸ்.ராஜம்  மற்றும் 2017ம் ஆண்டிற்கான விருதிற்கு  தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் ஆகியோர் விழாவிற்கு வர இயலாததால் அவர்களுக்கு  பிறிதொரு நாளில் விருது வழங்கப்படும்.

செம்மொழி சாலை

செம்மொழித்  தமிழாய்வு மத்திய  நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி செம்மொழி சாலை’ எனப் பெயர் மாற்றம்  செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Related Stories: