ராஜபாளையம் பகுதியில் பாதுகாப்பின்றி சிதையும் வரலாற்று கல் மண்டபங்கள்

ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பின்றி சிதைந்து வரும் வரலாற்று சான்றாக திகழும் கல்தூண் மண்டபங்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையிலிருந்து திருமங்கலம், கிருஷ்ணன்கோயில், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் வரை சாலையோரங்களில் 350 ஆண்டு பழமையான கல்தூண் மண்டபங்கள் ஏராளமாக உள்ளன. இவைகள் பாதுகாப்பின்றி சிதைந்து வருகிறது. ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில், ஒரு கல்தூண் மண்டபம் சிதிலமடைந்த நிலையில் தூண்கள் சரிந்து அழிந்து வருகிறது. இது குறித்து ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி கூறியதாவது:

17ம் நூற்றாண்டில் மதுரையில் இருந்து தமிழகத்தின் தென்பகுதியை ஆட்சி செய்தவர் திருமலை நாயக்கர். இவர், மதுரையில் இருந்து குற்றாலம் வரையிலும் மற்றும் திருநெல்வேலி வரையிலும் பல இடங்களில் கல்தூண் மண்டபங்கள், தங்கும் சத்திரங்களை கட்டினார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட பயணம் செல்லும்போது இவைகளில் தங்கி இளைப்பாறினர். மேலும், திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், குற்றாலநாதர் கோயில்களில் உச்சிகால பூஜை முடிந்த பிறகு, மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் மதுரையில் இருக்கும்போது கோயில்களில் பூஜை நடைபெறுவதை மணியோசை கொண்டு அறிந்து கொள்ள வழிநெடுக கல்தூண் மண்டபங்களை கட்டி, அங்கு மணிகளை கட்டி வைத்தார்.

பூஜை தொடங்கியவுடன் கல் மண்டபங்களில் அமைக்கப்பட்ட மணிகளை, ஒவ்வொரு மண்டபங்களில் இருந்தும் வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கச் செய்து பூஜை தொடங்கியதை அறிந்து கொண்டார். எனவே, கல் மண்டபங்கள், மணி மண்டபங்கள் எனவும் அழைக்கப்பட்டன. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

ராஜபாளையம் அருகே பிரதான சாலையின் ஓரங்களில் ஏராளமான கல் மண்டபங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் பல மண்டபங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. பல மண்டபங்கள் வர்த்தக கட்டிடங்களாக செயல்பட்டு வருகின்றன. சில கல் மண்டபங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

ராஜபாளையத்தில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் மேல்விதானத்தில் அலங்காரப் பூக்களை சிற்பிகளால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்தூண்கள் எண் பட்டை கோணங்கள் கொண்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மிக அழகாக செதுக்கப்பட்டு உள்ளன.

பத்துக்கும் மேற்பட்ட கல் தூண்களில் பல தூண்கள் சரிந்த நிலையில் புதர்மண்டிக் காணப்படுகிறது. கல் மண்டபங்கள் சில காலங்களுக்குப் பிறகு அறைகளாக உருவாக்குவதற்காக செங்கல் கட்டுமானங்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த செங்கல் கட்டுமானங்கள் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இத்தகைய கல்தூண் மண்டபங்களை பாதுகாப்பதற்காக மக்கள் ஆர்வலர் குழுக்கள் இணைந்து செயல்படும்போது நமது ஊரின் பெருமையையும், பாரம்பரிய சின்னத்தின் முக்கியத்துவத்தையும், பிற்கால சந்ததியினருக்கு அறிந்து கொள்ளும் வகையில் நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் இருந்து செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்த இப்பகுதியின் வரலாற்றை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று பேராசிரியர் முனைவர் போ.கந்தசாமி கூறினார்.

Related Stories: