சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்ட பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை

சின்னசேலம்: சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்ட பணிகளை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம்  துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தாமதமாக உதயமானாலும், விவசாயம், அரிசி, கரும்பு, மரவள்ளி உற்பத்தியில் முன்னேறி வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சி தலைமையகத்தில் ரயில் போக்குவரத்து இல்லை. ஆனால் இங்குள்ள தொழிலதிபர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.

இதை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த கள்ளக்குறிச்சி வியாபார பிரமுகர்கள் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில்பாதை அமைக்க வேண்டும் என்று அப்போதைய இணை அமைச்சர் வேங்கடபதியிடம் மனு கொடுத்தனர். அவரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார். இதையடுத்து சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அப்போது ஆரம்ப கட்ட பணிகள் துவங்கிய நிலையிலும்,  நிலம் கையகப்படுத்தும் பணி  தாமதம் ஆனது. இருப்பினும் மீண்டும் கடந்த 2016ல் ரூ166.61கோடியில் திட்டப்பணிகள் துவங்கியது.

அதாவது சின்னசேலம் கள்ளக்குறிச்சி ரயில்பாதை தடத்தில் ஒரு மேம்பாலம், 2 பெரிய பாலம், 22 சிறிய பாலம் என கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணிகளும் ஓரளவு நிறைவு பெற்றுள்ளது.

 ஆனால் கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டத்திற்கு சுமார் 47 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துடன் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கிராமப்புற எல்லையில் பணப்பரிவர்த்தனை நடந்து வருகிறது. ஆனால் சின்னசேலம், கள்ளக்குறிச்சி எல்லையில் நிலம் கையகப்படுத்துவதில் அவர்களுக்கு ஈட்டுத்தொகை நிர்ணயம் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே துறையும் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்ட பணிகளை மந்தமாக கையாண்டு வருகிறது. ஆகையால் கடந்த 2006ல் தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்களின் கனவுத்திட்டமானது 16வது ஆண்டாக நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது. ஆகையால் நமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்த திட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி, அரசின் கவனத்திற்கும், ரயில்வே துறை கவனத்திற்கும்  கொண்டு சென்று தொய்வடைந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: