பரமக்குடியில் சேதமடைந்த தரைப்பாலம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பரமக்குடி :  பரமக்குடி வைகை ஆற்றில் உடைந்த பாலத்தை உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பழைய ஆற்றுப்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது போக்குவரத்திற்காக தற்காலிகமாக தரைப்பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து, புதிய ஆற்றுப் பாலம் திறக்கப்பட்ட நிலையிலும், தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்து வாகனங்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மாதம் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக ஓடிய வெள்ள நீரால் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் உடைந்த  இடிபாடுகளுக்கு மத்தியில் பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். இதனால் தேவையற்ற விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடைந்த பாலத்தை அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: