சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரிப்பு-கடந்த ஆண்டு 89 வழக்குகள் பதிவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 89 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குறித்து கடந்த 2015ம் ஆண்டு அதிகமான புகார்கள் எழுந்தன. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 28 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன.

2016ம் ஆண்டில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக 29 வழக்குகளும், 2017ம் ஆண்டு 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் 27 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில் 25 வழக்குகள் பதிவாகின. 2020ம் ஆண்டு 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2021ம் ஆண்டில் போக்சோ பிரிவின் கீழ் 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 75 வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்காகவும், 14 வழக்குகள் தவறான நோக்கத்துடன் அணுகுதல் என்ற முறையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்காக பதிவானவையாகும். மாவட்டத்தில் சப் டிவிசன் அடிப்படையில் உள்ள ஐந்து மகளிர் போலீஸ் ஸ்டேசன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்குகளில் சிவகங்கை மகளிர் ஸ்டேசனிலேயே அதிகபட்சமாக இந்த வழக்குகள் பதிவாகின்றன. அடுத்தடுத்த எண்ணிக்கையில் மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஸ்டேசன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் அது தொடர்பான புகார்கள், வழக்குகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், தற்போது பாலியல் தாக்குதல் தொடர்பாக புகார் கொடுப்பது என்பதில் சற்று கூடுதலாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த அளவில் புகார் தெரிவிப்பதும் கைது செய்வதும் மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் நடக்கிறது. காதல் சம்பவத்தில் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையவில்லை என்ற காரணத்தால் காதலன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட ஆணின் வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படும். பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளையும் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.

போக்சோ பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்கில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி வருகிறது. இதனால் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.மகளிர் போலீசார் ஒருவர் கூறுகையில், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள், பலாத்காரம் உள்ளிட்டவை குறித்து தற்போது கூடுதல் புகார்கள் வருவது உண்மையே. வரும் புகார்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதில் மற்ற வழக்குகளைப்போல் எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்றார்.

Related Stories: