லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ள சம்பத்கிரி மலை உச்சிக்கு பாதை அமைக்க வேண்டும்-பக்தர்கள் கோரிக்கை

போளூர் :  போளூர் சம்பத்கிரி மலை உச்சிக்கு செல்ல பாதை அமைத்து, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சம்பத்கிரி மலை உச்சியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1978ம் ஆண்டு கடைசியாக இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு 1992ம் ஆண்டு இலகு கும்பாபிஷேகம் எளிமையாக நடத்தப்பட்டது. இது மகரிஷி புலத்திய பிரம்மா வழிபட்ட தலமாகும். விஜயநகர மன்னரும், அதன்பிறகு ஓகூர் சீனிவாசராவ் ஆகியோரும் இக்கோயிலை கட்டியுள்ளனர். இசை மேதை அச்சுதாசர், திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் ஆகியோர், இங்கு தவம் செய்துள்ளனர். சித்தர் விடோபா சுவாமிகள் மலையடிவாரத்தில் இருக்கும் ஏரி மதகில் இருந்துதான் அருள்பாலித்ததாக கூறப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு மிகுந்த கோயிலின், மலை உச்சிக்கு செல்ல வசதியாக சுமார் 840 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.  பக்தர்களின் வசதிக்காகவும், இளைப்பாறுவதற்கும் 5 மண்டபங்கள் அமைக்கப்பட்டாலும், உச்சியில் உள்ள மண்டபத்திற்கு மாற்றுப்பாதை இல்லாததால், 4 மண்டபங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. மலைப்பாதையில் 9 மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலையில் 2 நீர் சுனைகள் அமைந்துள்ளன.

மலையுச்சிக்கு செல்லும் படிகளை அமைக்க மறைந்த திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் பங்கும் உண்டு. கட்டப்பட்ட படிக்கட்டுகள் செங்குத்தாகவும், ஏறுவதற்கு சிரமமாகவும் இருந்ததால் சமூக ஆர்வலர் முயற்சியால் முதல் 110 படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு தண்ணீர், மணல், சிமென்ட், பணியாளர்கள் என பிரச்னை தொடர்ந்ததால், அந்த பணியில் எதிர்பாராமல் தடை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மேலே படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதால், வயதானவர்கள் மலைமீது ஏறி தரிசனம் செய்ய சிரமம் இருந்து கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், ஒருமுறை சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர், மலை உச்சியில் இருந்து பார்வையிட்டு மேற்குப்புறமாக திருசூர் சாலை உள்ள இடத்தில் இருந்து பாதை அமைக்கும்பட்சத்தில், ஒருசில நாட்களிலேயே பாதையை அமைத்து விடலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தார். பக்தர்களின் வசதிக்காக படிக்கட்டுகள், நடுவில் இளைப்பாற மண்டபங்கள், மின்விளக்குகள்,  உச்சியில் சங்கு, சக்கர, நாம நியான் விளக்குகள், சமீபத்தில் கிரிவலம் வருவதற்கு வசதியாக மலை சுற்றும் பாதை சீரமைப்பு போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதற்கு பக்தர்களும், போளூர் பொதுமக்களும் மிகுந்த வரவேற்பினை அளித்துவரும் அதேநேரத்தில் மலைப்பாதை வருவதையும் வரவேற்கின்றனர்.

போளூர் பேரூராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோரிடம், மலையுச்சிக்கு பாதை அமைத்தால் வாகனத்திலேயே மேலே சென்று, சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, மலை உச்சிக்கு பாதையும், விரைவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: