ரயில்வே கேட்டில் காத்திருப்பதை தவிர்க்க கொள்ளிடத்தில் ரயில்வே மேம்பாலம்-வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்திலிருந்து மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்ட புரம், மகேந்திரபள்ளி, கொடக்கார மூலை, புதுப்பட்டினம், பழையாறு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே கொள்ளிடம ரயில் நிலையம் அருகே ரயில் பாதை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் செல்வோர் இந்த ரயில்வே பாதையை கடந்துதான் செல்ல வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் இரவும் பகலும் எந்த நேரமும் இந்த வழித்தடத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றன. மாங்கானாம்பட்டு, நல்லூர், புதுப்பட்டினம் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும், பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்பவர்களும் இந்த சாலைவழியேதான் சென்று வருகின்றனர். மேலும் கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த நெடுஞ்சாலை வழியேதான் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

ரயில் பாதையில் அடிக்கடி ரயில்கள் செல்வதால் சாலையின் குறுக்கே ரயில்கள் கடந்து செல்லும் வகையில் ரயில்வேகேட் மூடப்பட்டு ரயில் சென்ற உடன் திறக்கப்படுகிறது. ரயில் வருவதற்கு பத்து நிமிடம் முன்பே கேட் மூடப்படுவதால் சாலையில் செல்பவர்கள் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் காத்திருந்து பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்ட பிறகு செல்கின்றனர்.

ரயில் காலதாமதமாக வந்தால் மேலும் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்து நிற்கின்றனர். இதனால் அவசரமாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வர முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் இதனால் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே இந்த ரயில் பாதை சாலையை கடக்கும் இடத்தில் மேம்பாலம் அமைத்தால் கொள்ளிடம் பகுதியிலிருந்து நெடுஞ்சாலையில் தொடர்ந்து செல்பவர்கள் எந்த இன்னலும் இன்றி சென்று வர முடியும்.இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் கட்டுவதால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைவார்கள்.

மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் முதியோர்களும் பயனடைவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நீண்டநாள் பொதுமக்களின் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: