50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி தியாகு அரியானாவில் சுற்றிவளைத்து கைது

சென்னை: காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான பொய்யாகுளம் தியாகுவை, தனிப்படை போலீசார் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் அதிரடியாக கைது செய்தனர்.காஞ்சிபுரத்தில் ஸ்ரீதரின் தற்கொலைக்கு பிறகு அந்த இடத்தைப் பிடிக்க, சமூக விரோத செயல்களில் பொய்யாகுளம் தியாகு ஈடுபட்டு வருகிறார். காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் மிரட்டி வந்தார். அவரால், பாதிக்கப்பட்டவர்களில் ஒருசிலர் மட்டுமே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். அதேபோலே, ஸ்ரீதரின் மற்றொரு  கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. இவர்களுக்குள் யார் பெரிய தானா என்ற போட்டியில் 13க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது.

இந்த வழக்குகளில், இவர்கள் சில ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த தியாகு தலைமறைவானார். ஆனாலும் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மாமுல் தரவில்லை என்பதற்காக தனது அடியாட்களை விட்டு அடித்து நொறுக்கினார்.இந்நிலையில் சென்னையின் புறநகர் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளை ஒழிக்க சிறப்பு அதிகாரியாக கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை  நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து பழைய ரவுடிகள் வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு தப்பியோடிவிட்டனர். குறிப்பாக படப்பை குணா,  தினேஷ்குமார், தியாகு ஆகியோரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக முயற்சித்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார், பிற மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர் . அதன்படி, அரியானா மாநிலம், பரிதாபாத் பகுதியில் தியாகு பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கடந்த சில நாட்களாக அப்பகுதியை காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் முகாமிட்டு, தியாகுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார், தன்னை நெருங்கியதை அறிந்த தியாகு, நீதிமன்றத்தில் சரணடைய முயற்சித்தார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரவுடிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குறிப்பாக தற்போது பிரபல தாதாவாக விளங்கும் படப்பை குணாவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றனர்.

இதற்கிடையில், தியாகுவின் மனைவி சுதா, வழக்கறிஞர் நைனா முகமது என்பவர் மூலம் தமிழக காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில், தனது கணவர் தியாகுவை அரியானா மாநிலத்தில் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் இருந்து ₹5 லட்சத்தை பறித்து கொண்டு, சட்டவிரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்கின்றனர். மேலும் சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ள போலீசார், என்கவுன்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, என் கணவர் தியாகுவை காப்பாற்றி அவரிடம் பறித்த ₹5 லட்சத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: