புவனகிரி: சிதம்பரம் அருகே சகோதரர்களை அரிவாளால் வெட்டி கொன்ற கும்பலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பாலகிருஷ்ணன்(44), அரசு பேருந்து டிரைவர். அண்ணாமலையின் தம்பி ராமசந்திரன் மகன் ராமகிருஷ்ணன்(36), விவசாயி. பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மாவட்ட அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் இருவரையும் பார்க்க இவர்களது உறவினர்கள் மருத்துவமனைக்குள் செல்லும்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மருத்துவமனை முன்பு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் மருத்துவமனைக்கு வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வருவதாகவும், அந்த விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
