ராமநாதபுரத்தில் கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளரின் கந்துவட்டி கொடுமையால் விஷமருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகே மேலசிறுபோது கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல் அதே பகுதியை சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காசாளர் கருப்பையா என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் கருப்பையா அவதூறாக பேசி பணத்தை திரும்ப கேட்ட நிலையில் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தற்கொலைக்கான காரணத்தை வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் வாங்கிய 3 லட்சம் ரூபாய் பணத்திற்கு இதுவரை 3.5 லட்சம் ரூபாயை வட்டியாக செலுத்தியுள்ளதாகவும் 6 லட்சம் ரூபாய் பெற்றதாக தன்னை ஏமாற்றி கையெழுத்து பெற்றதாகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த விவசாயி தங்கவேல், கருப்பையாவிடம் குறைந்த வட்டிக்கு பணத்தை பெற்று அதிக வட்டிக்கு வெளியில் கொடுத்து சம்பாதித்து வந்ததாகவும் ஆனால் தங்கவேலிடம் பணம் பெற்ற நபர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பணத்தை ததிரும்ப செலுத்த முடியாமல் தங்கவேல் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே தற்கொலைக்கு தூண்டியதாக கருப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: