கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமில்லை; டெல்டா விவசாயிகள் முதல்வருக்கு நன்றி

தஞ்சை: நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், நெல்கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் தர்ம.சுவாமிநாதன் கூறியது: நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு முறை என்பது விவசாயிகளுக்கு மிகுந்த சிரமத்தையும் பல்வேறு இடர்பாடுகளையும் ஏற்படுத்தும். எனவே இந்த முறையை கைவிட்டு பழைய முறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் முதல்வருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது சம்பா அறுவடை நடந்து வரும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உணவு  துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து  மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில்  நடந்த கூட்டத்தில் ஆன்லைன் பதிவு கட்டாயமில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர் சக்கரபாணி ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு விவசாய சங்க தலைவர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: