ஆஸி. ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் பவுலா படோசா: நடால் வெற்றி நடை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தகுதி பெற்றார்.2வது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை மார்டினா டிரெவிசனுடன் (111வது ரேங்க், இத்தாலி) நேற்று மோதிய படோசா (6வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.  நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) 6-1, 6-1 என நேர் செட்களில்  இத்தாலியின் லூசியா புரோன்செட்டியை (142வது ரேங்க்) வீழ்த்தி 3வது சுற்று முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), நவோமி ஒசாகா (ஜப்பான்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு), ஜெலனா ஆஸ்டபென்கோ (லாட்வியா), மரியா சாக்கரி (கிரீஸ்),  விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிக் (22வது ரேங்க்)  2-6, 5-7 என நேர் செட்களில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவிடம் (60வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வி கண்டார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜெர்மனியின்  யானிக் ஹன்ஃப்மனுடன் நேற்று மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 6-2, 6-3, 6-4 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் பெரெட்டினி (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), மான்பில்ஸ் (பிரான்ஸ்), கரெனோ புஸ்டா, அல்கராஸ் (ஸ்பெயின்), கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோரும் 3வது சுற்றில் நுழைந்துள்ளனர்.

ஷபோவலாவ் போராட்டம்: கனடாவின் டெனிஸ் ஷபோவலாவ் தனது 2வது சுற்றில் 7-6 (8-6), 6-7 (3-7), 6-7 (6-8), 7-5, 6-2 என 5 செட்கள் கடுமையாகப் போராடி தென் கொரியாவின் சூன்வூ க்வானை வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது.இந்தியா ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - நாடியா கிச்சேனோக் இணை 4-6, 6-7 (5-7) என நேர் செட்களில் ஸ்லோவேனியாவின்  காயா யுவான் - தாமரா ஜிடன்செக் ஜோடியிடம் போராடி தோற்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் ரோகன் போபண்ணா - ரோஜர் வாசலின் இணை 6-3, 6-7 (2-7), 2-6 என்ற செட் கணக்கில் ட்ரீட் ஹுவே (பிலிப்பைன்ஸ்) - கிறிஸ்டோபர் ருங்கட் (இந்தோனேசியா) இணையிடம் தோற்று வெளியேறியது.

Related Stories: