ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?: மல்லையாவின் லண்டன் பங்களாவும் போச்சு

லண்டன்: சுவிஸ் வங்கியிடம் இருந்து வாங்கிய கடனுக்காக, லண்டனில் உள்ள ₹200 கோடி மதிப்புள்ள விஜய் மல்லையாவின் பிரமாண்ட பங்களாவை பறிமுதல் செய்யும்படி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய வங்கிகளில் ₹9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்காக சிபிஐ, அமலாக்கத் துறை  நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது தொடர்பாக, இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மேலும், அவர் இந்தியாவில் விட்டு சென்ற வீடுகள், அலுவலகங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லண்டனில் ரீஜென்ட் பார்க் நகரில் ₹200 கோடி மதிப்புள்ள பிரமாண்ட பங்களாவில் மல்லையா தனது மகன் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வருகிறார்.   இந்த  பங்களாவை சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றில்  அடமானம் வைத்து 2012ம் ஆண்டு மல்லையா கடன் வாங்கினார்.  ஆனால்,  அந்த கடனையும் அவர் கட்டவில்லை. 5 ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலையில், வழக்கம் போல் அவர் ஏமாற்றி வந்தார். இதையடுத்து, லண்டன் நீதிமன்றத்தில் சுவிஸ் வங்கி வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம்,  பங்களாவை வங்கியிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறும்படி  மல்லையாவுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பங்களாவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை சுவிஸ் வங்கி தொடங்கி விட்டது. இதனால், தனது குடும்பத்துடன் வேறு வீட்டில்  மல்லையா குடியேற உள்ளார். இந்தியாவில் உள்ள வீடுகள் ஏற்கனவே அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது லண்டனில் உள்ள வீட்டையும் அவர் இழந்துள்ளார்.

Related Stories: