பட்டுப்புடவை, மாலைகளுடன் தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ரங்கநாதர் சீர்வரிசை

திருச்சி: பட்டுப்புடவை, மாலை, பழங்களுடன் சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை பொருட்களை சிறப்புடன் கொடுத்து அனுப்பினார். தைப்பூச தினத்தையொட்டி சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் சீர்வரிசை அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது அம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் பந்தலில் வீற்றிருப்பார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வாகனங்கள் மூலம் சீர்வரிசை பொருட்கள் சமயபுரம் கோயிலுக்கு எடுத்துச்சென்று கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு தைப்பூச தினமான நேற்று மாலை ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள் மற்றும் தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தட்டுக்களை கையில் ஏந்தியவாறு மேள, தாளம் முழங்க ரங்கா, ரங்கா கோஷத்துடன் கோபுரம் அருகே ஊழியர்கள் கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து வாகனங்களில் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சமயபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோயில் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர், சீர்வரிசை பொருட்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Related Stories: