பேச்சிப்பாறை அருகே பரபரப்பு ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணிக்கு நடுக்காட்டில் பிரசவம்-தாய், சேய் நலம்

குலசேகரம் : பேச்சிப்பாறையில் இரவு ஆம்புலன்சில் வந்த, நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்ததால் காட்டிற்குள் வைத்து பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.குமரி மாவட்டம் பேச்சிப்பாறையை அடுத்த விளாமலை, மலைவாழ்குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் லேகா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மலைப்பகுதி என்பதால் சிகிச்சைக்கு செல்ல திணறி உள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பேச்சிப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.ஆம்புலனஸ் இரவு 7 மணியளவில் விளாமலை பகுதிக்கு சென்று லேகாவை ஏற்றி கொண்டு பேச்சிப்பாறை நோக்கி வந்தது.  சிறிது தூரம் சென்றதும் லேகாவுக்கு பிரசவலி அதிகரித்துள்ளது. அந்த பகுதி யானை நடமாட்டம் உள்ள இடமாகும். இருந்தும் தாயையும், ேசயையும் காப்பாற்றும் நோக்குடன் டிரைவர் அஜித் ஆம்புலன்சை காட்டு பகுதிக்குள் ஒதுக்கி நிறுத்தினார்.

இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர் சரஸ்வதி, லேகாவுக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு தாய், ேசயுடன் பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் வந்தது. அங்கு தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர். அவசர காலத்தில் திறமையாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ பணியாளர் சரஸ்வதியை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சம்பவத்தால் பேச்சிப்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: