தாராபுரம் தளவாய்பட்டினத்தில் எருதுவிடும் நிகழ்ச்சிக்கு தடை காளைகளுடன் மக்கள் மறியல்

தாராபுரம்: தாராபுரம் அடுத்த தளவாய்பட்டினத்தில் எருது விடும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்காததால் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டினம் கிராமத்தில்  பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக எருதுவிடும் விளையாட்டு நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து கிராம மக்கள் நேற்று காலை 500க்கும் மேற்பட்டோர் காளைகளுடன் திரண்டு தாராபுரம்-உடுமலை செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த தாராபுரம் வருவாய்த்துறை கோட்டாட்சியர் குமரேசன், தாசில்தார் சைலஜா, டிஎஸ்பி தன்ராஜ் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கும் வரை மறியலை கைவிட மாட்டோம், மாவட்ட கலெக்டர் நேரில் வந்து இதற்கான உத்தரவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்போது கொரானா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டு எருதுவிடும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக தாராபுரம்-உடுமலை சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: