கொரோனா பரவல் எதிரொலி: கேரள முதல்வர் அலுவலகம் மூடல்

திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தில் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா பரவியதை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன் அலுவலகம் இன்று மூடப்பட்டது. கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று 22,946 பேருக்கு நோய் பரவியது. தொற்று சதவீதம் 33ஐ தாண்டியது. கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 5,863 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாவட்டத்தில் 100 பேரில் 44 பேருக்கு நோய் பரவியுள்ளது.

இதற்கிடையே திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. வனம், அறநிலையத்துறை மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பலருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் இன்று முதல் முதல்வர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மிக முக்கிய அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. இதேபோல தலைமை செயலகத்திலுள்ள மத்திய நூலகமும் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல பஸ் சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories: