தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தர அமித்ஷா உறுதி: டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு பேட்டி

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நீட் விலக்கு சம்பந்தமாக தமிழக எம்பிக்கள், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச அனுமதி கேட்டபோது பலமுறை மறுத்துவிட்டார். இது தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்று அனைத்துக்கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் அனைத்துக்கட்சி எம்பிக்கள் இன்று காலை தனித்தனி விமானங்கள் மூலம் டில்லி புறப்பட்டு சென்றனர். இதன்படி எம்பிக்கள் டி.ஆர்.பாலு (திமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), ரவிக்குமார் (விசிகே), ஜி.கே மணி எம்எல்ஏ (பாமக) மற்றும் நவாஸ் கனி எம்.பி. (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றனர். இவர்கள் மாலை 4.30 மணிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் தமிழ்நாடு அணைத்துக் கட்சி குழு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது; நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமித்ஷாவிடம் அளித்தோம். ஒன்றிய சுகாதாரம், கல்வித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக அமித்ஷா கூறினார். தமிழகம் கோரிய நிதியை ஜன.31-க்குள் அனுப்பி வைப்பதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்வதற்கான நிதியை ஜன.31க்குள் தருவதாக உறுதி அளித்தார்.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் அமித்ஷாவிடம் கூறினோம். ஏற்கனவே அமித்ஷா தங்களை சந்திக்க முடியாததற்கு வேலைப்பளுவி காரணம் என அவர் குறிப்பிட்டார் இவ்வாறு கூறினர்.

Related Stories: