நிதித்துறை யோசனையை தொடர்ந்து ஏரிகளை தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணல் விற்பனை : நீர்வளத்துறை நடவடிக்கை

சென்னை : ஏரிகளை தூர்வாரி அதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட நிதித்துறை யோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் பருவமழை காலங்களில் மூலம் கிடைக்கும் மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 40 சதவீதம் கொள்ளளவு மண் படிமங்களால் காணப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் ஏரிகளின் கொள்ளளவை பழைய நிலைக்கு கொண்டுவர நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்க முன்வந்துள்ளது.  மேலும், இந்த ஏரிகளில் தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளை தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை நீர்வளத்துறை சார்பில் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வந்தது.

இதேபோன்று அனைத்து ஏரிகளையும் தூர்வாரி அதன்மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட நிதித்துறை சார்பில் நீர் வளத்துறைக்கு யோசனை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 1,474 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட காவேரிப்பாக்கம் ஏரியை ₹50 கோடி செலவில் தூர்வாரப்படுகிறது. அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும் நிதித்துறை சார்பில் நீர்வளத் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: