அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்க 1,999 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 1,999  மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (ஜன. 14) அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை கலெக்டர் அனிஷ்சேகர்  தலைமையில் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில விதிகளை வகுத்து, மாவட்டத்தில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

ஜல்லிக்கட்டு காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும், 300 மாடுபிடி வீரர்களும், பார்வையாளராக 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். உள்ளூர் மக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வெளியூர் மக்களுக்கு அனுமதி இல்லை.

அவனியாபுரத்தில் கலந்து கொள்ளூம் மாடுபிடி வீரர்கள், காளைகள் பாலமேடு, அலங்காநல்லூரில் கலந்து கொள்ள முடியாது. அதேபோல், ஒரு வீரர், ஒரு காளை ஒரு இடத்தில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு செய்யும் பணி நேற்று முன்தினம் மாலை துவங்கியது. நேற்று மாலை வரை இந்த பதிவு நடந்தது. இ-சேவை மையங்களில் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் வந்து, பதிவு செய்து கொண்டனர். ஆன்லைனில், எந்த இடத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது என்பதை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து பதிவு செய்தனர்.

இதன்படி நேற்று மாலை வரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளுக்காக 4,534 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், 1,999 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தகுதி அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டு, போட்டிகளில் பங்கேற்பதற்கான மாடுபிடி வீரர்கள், காளைகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எந்த காளை, எந்த வீரர், எந்த ஊர் என்பதையும் பிரித்து அறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: