கொரோனா பரவல் எதிரொலி; முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை: வனத்துறை உத்தரவு

முத்துப்பேட்டை: கொரேனா பரவல் எதிரொலியாக முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் அலையாத்திக்காடு உள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களை பாதுகாக்கும் அரணாக உள்ளது. மேலும் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக்காடு உள்ளது.

காவிரி படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்புநில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. இது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. முத்துப்பேட்டை அலையாத்திக்காடுக்கு ஆற்றின் வழியாக படகில் நெடுந்தூர பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். கடலுக்குள் சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டி குட்டி தீவுகளின் அழகு பிரமிக்க வைக்கும். அலையாத்திக்காட்டுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

இந்தநிலையில் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில், முத்துப்பேட்டை அலையாத்திகாடு ஒரு பொக்கிஷம். இங்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வந்து ஏமாற வேண்டாம் என்றார்.

Related Stories: