ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி புகாருக்கு பதிலடி அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள்தான் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இட்டுக்கட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல்வர் 3 நாட்களாக ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். அதனால் அவர்களின் பிரசாரம் பிசுபிசுத்தது. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கியதில் ஊழல் செய்தனர். இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் பொய் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் கரும்பு கொள்முதல் செய்ததிலும் ஊழல் நடந்தது. திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் ஆதாரம் இருந்தால் என்னை சந்தித்து கூறினால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியை மக்கள் பாராட்டி வருகிறார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சியாக 21 பொருட்கள் பெற்றுச் செல்கிறார்கள்.

ராமநாதபுரம் பகுதியில் பச்சரிசியில் வண்டு இருப்பதாக பொய்யாக தெரிவித்தது அதிமுக நிர்வாகி ஒருவரின் துணைவியார்தான் என விசாரணையில் தெரியவந்தது. திருத்தணி பகுதியில் வந்த புகாரை சப்-கலெக்டர் நேரடியாக சென்று விசாரித்தார். பொய்யான வீடியோ பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்ட ஆட்சி தலைவர், ஏற்காடு பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி மக்கள் ரேஷனில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு அருமையாக இருப்பதாக சொன்னார்கள்.

ஆனால், இந்த ஆட்சி மீது எப்படியாவது பழிசுமத்த வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார்கள். இதில் தவறு இருப்பதாக ஆதாரத்துடன் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது முறைகேடு செய்ய முடியாமல் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். வடசென்னை பகுதியில் ஒரு ரேஷன் கடையில், பை இருந்தும் பை இல்லை என்று சொன்னதால் இளங்கோவன் என்ற விற்பனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் தவறு செய்தவர்கள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கொண்டுள்ளார். ஆனால் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* குறைந்த விலை கோரியவர்களுக்கு டெண்டர்

21 வகை பொருட்கள் வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி ஆர்டர் வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் டெண்டரில் கலந்து கொண்டன. இதில், குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்குவோம் என்று டெண்டர் கோரி இருந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் வழங்கப்பட்டது. இந்த 3 பொருளும் ரூ.45க்கு வாங்கப்பட்டது. தற்போது 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏக்காய் என 3 பொருட்களும் ரூ.62க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் ரூ.48 தமிழக அரசு மிச்சப்படுத்தியுள்ளது. முறைகேடு, குறைபாடுகளின் மொத்த உருவம்தான் இபிஎஸ், ஓபிஎஸ் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Related Stories: