கடும் விலை வீழ்ச்சியால் சம்பங்கியை சாலையில் கொட்டும் அவலம்-விவசாயிகள் கவலை

தர்மபுரி : தர்மபுரியில் கடும் விலை வீழ்ச்சி காரணமாக, சம்பங்கி பூக்களை சாலையோரம் கொட்டும் அவலநிலை காணப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பங்கி விதை கிழங்கு சாகுபடி செய்த 6 மாதத்தில் பூ பிடிக்க ஆரம்பிக்கிறது. ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் மகசூலுடன், ஆண்டு முழுவதும் சீரான விலை(கிலோ ₹40 முதல் ₹50 வரை) கிடைக்கும்.

வழக்கமாக மார்கழி மாதத்தில் கோயில் விசேஷங்களுக்கும், தொடர்ந்து தை மாதத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கும் சம்பங்கி பூக்களின் பயன்பாடு அதிகரிக்கும். எனவே, மார்கழி, தை மாதத்தில் மகசூல் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சம்பங்கி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, தர்மபுரி மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு கோயில்களில் வழிபட அரசு தடை விதித்துள்ளது.

மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சம்பங்கி விலை குறைந்து கிலோ ₹10க்கு விற்பனையானது. நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், தர்மபுரிக்கு கொண்டு வந்த பூக்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பென்னாகரம் சாலையில் மேம்பாலம் அருகே, சம்பங்கி பூக்களை கொட்டிவிட்டு சென்றனர். சுமார் 5 டன் பூக்கள் சாலையோரம் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: