களக்காடு அருகே குளத்தின் மறுகாலில் மீண்டும் உடைப்பு-300 ஏக்கர் தீவாகும் என்பதால் விவசாயிகள் கவலை

களக்காடு : களக்காடு அருகே குளத்தின் மறுகாலில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, விரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு, விளைநிலங்கள் தீவாகும் அபாயம் நிலவுகிறது.நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அரசப்பத்து குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தலையணையில் இருந்து வரும் கால்வாய் மூலம் அரசபத்து குளத்திற்கு தண்ணீர் செல்கிறது.

இந்த குளத்தின் மறுகால் தண்ணீர் பச்சையாறு அணையில் இருந்து, தேங்காய் உருளி சிற்றருவிக்கு செல்லும் சாலை வழியாக வந்து, அணையின் ஊட்டு கால்வாயில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குளம் நிரம்பியதும் உபரிநீர் மறுகால் வழியாக ஊட்டு கால்வாயில் விழுந்து வருகிறது. தேங்காய் உருளி அருவி சாலை வழியாகவே விவசாயிகள் மலையடிவாரத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு அரசப்பத்து குளம் நிரம்பி குளத்தின் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மறுகாலில் உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்த போது மீண்டும் மறுகாலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. உடைப்பில் விரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வரும் நாட்களில் மழை பெய்தால் விரிசல் அதிகரித்து தேங்காய் உருளி சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சாலை துண்டிக்கப்பட்டால் மலையடிவாரத்தில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் தீவாகி விடும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. சாலை துண்டிக்கப்பட்டால் விளைநிலங்களுக்கு செல்ல மாற்றுப்பாதை இல்லை என்பதால் விவசாயிகளால் தங்கள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகின்றனர்.

இந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் அவைகள் பயிர்களை சேதப்படுத்தி விடாமல் இருக்க பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் விவசாயிகள் விளைநிலங்களில் தான் தங்கியிருப்பர். சாலை துண்டிக்கப்பட்டால் விவசாயிகளால் விளைநிலங்களுக்கு சென்று வர தடை ஏற்பட்டு விடும். விவசாய பயிர்களை பராமரிக்க முடியாமல் போய் விடும். எனவே பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து அரசப்பத்து குளத்தின் மறுகால் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: