திருப்பதியில் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி; 5 மணி நேரத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகள் காலி: ஒமிக்ரான் அச்சமின்றி குவிந்த பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 13ம்தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் 22ம்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசி நாளில் ஆன்லைனில் ₹300 டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவ டிக்கெட் பெற்ற பக்தர்கள், வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுதவிர உள்ளூர் மக்களுக்கு தினமும் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட்கள் பெற நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 5 கவுன்டர்களிலும் கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து, திருப்பதி எஸ்பி வெங்கட அப்பல நாயுடு தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். ஏற்கனவே திருப்பதியில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் டிக்கெட் கவுன்டர்களில் பக்தர்கள் அதிகளவு திரண்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என புகார் எழுந்தது.

இதையறிந்த தேவஸ்தான நிர்வாகம், கூட்டம் சேருவதை தவிர்க்க இரவு ேநரத்திலேயே டிக்கெட் வழங்க முடிவெடுத்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 50 ஆயிரம் டிக்கெட்டுகளும் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது.

திரையரங்கு, மால்களில்  50 சதவீதம் அனுமதி

ஒமிக்ரான் பரவலை தடுக்க முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்கு மற்றும் மால்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. அப்போது, முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ‘ஆந்திராவில் விரைவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.  திரையரங்கு மற்றும் மால்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஓட்டல்கள், வணிக வர்த்தக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 8ம் தேதி முதல் வருகிற 16ம் தேதி வரை சங்கராந்தி (பொங்கல்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பஸ்களில் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ₹50 அபராதம் வசூலிக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக நடத்துனரிடம் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் சிறப்பு ஆப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

*பக்தர்கள் போராட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளது. இதனால், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களை கொண்டு வருவோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது.  இதையறியாத நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி தர்மா அலுவலகத்தின் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து சிபாரிசு கடிதங்களை  கொண்டு வந்த பக்தர்களுக்கு ₹300 சிறப்பு  தரிசன டிக்கெட்டில் அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: