செட்டிநாடு வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் அரியலூர் விவசாயிகளுக்கு பயிற்சி

செந்துறை : செந்துறை பகுதி விவசாயிகள் செட்டிநாட்டில் உள்ள மானாவாரி நில வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு பயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இப்பயிற்சியில் செந்துறை வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாளர் பழனிசாமி தலைமையில் செந்துறை, அரியலூர் மற்றும் திருமானூர் வட்டார விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மானாவாரி நிலைய ஆராய்ச்சி தலைவர் குருசாமி தொழில்நுட்ப உரையாற்றுகையில், மானாவாரி நிலங்களுக்கான தொழில்நுட்பங்களில் ஒன்றான கோடை உழவின் முக்கியத்துவம், விதைகளை கடினப்படுத்தும் முறை மற்றும் ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுதலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்.

பண்ணை மேலாளர் பாண்டீஸ்வரன் பேசுகையில், மானாவாரி நிலங்களில் பயிர் இடுவதற்கு உகந்த துவரை ரகம், கம்பு ரகம், மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிடுதல், சீரக சம்பா நெல் பயிரிடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி கூறினார். பண்ணை மேலாளர் ரேவதி கூறுகையில், மானாவாரி நிலங்களில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகை பண்ணை கருவிகள் பயன்பாடு பற்றி எடுத்துக் கூறினார்.

குன்றக்குடி கேவிகே தலைவர் செந்தூர்குமரன் இந்நிறுவனத்தில் மானாவாரி நிலங்களுக்கான நடைபெறும் ஆராய்ச்சிகள் பற்றியும் மன்புழு உரம் தயாரிப்பதை பற்றியும் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

தோட்டக்கலை பயிர்கள் ஆராய்ச்சி மையமான குன்றக்குடி அருகில் உள்ள நேயம் கிராமத்திற்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விஜய் மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற கத்தரி ரகங்களையும் பலா மரம், சப்போட்டா மரம் ஆகியவற்றில் ஒட்டுக்கட்டுதல் முறையில் புதிய ரகங்கள் உருவாக்குதல் பற்றி எடுத்துக் கூறினார்.

Related Stories: