நெல்லை மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் உள்பட 155 பேருக்கு கொரோனா-சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கை

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்ட 155 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா 3வது அலை  உருமாற்றத்துடன் ஒமிக்ரான் வைரஸாக இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம்தேதி தொற்று பரவல் இல்லை என்றிருந்த நிலையில் அதன்பின் உயரத்தொடங்கிய கடந்த 2 வாரமாக அதிவேகமாக பரவி வருகிறது.நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய பட்டியலின்படி, மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மேலும் 155 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மாநகரில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 5 டாக்டர்கள், நர்சிங் பயிற்சி மாணவிகள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும் தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் 2ம்கட்ட தடுப்பூசி போட்ட நிலையில் ெதாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராதாபுரம் வட்டாரத்தில் 26 பேருக்கு தொற்று பரவியுள்ளது. கூடங்குளம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 20பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரேஇடத்தில் தங்கி பணியாற்றுவதால் ஒருவரிடம் இருந்து பலருக்கு தொற்று பரவியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் மேலும் பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் நாங்குநேரி காவல்நிலையம், ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வள்ளியூர் வட்டாரத்தில் 12பேரும், பாளையில் 7பேரும், மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி வட்டாரங்களில் தலா 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பை, சேரை, களக்காடு வட்டாரங்களில் நேற்று தலா ஒருவருக்கு தொற்று பரவியுள்ளது. நெல்லை மாநகரை பொருத்தவரை அரசு மருத்துவமனை வளாகம், பெருமாள்புரம் டிரைவர் காலனி, மகாராஜநகர் 11வது தெரு, வி.எம்.சத்திரம், என்ஜிஒ காலனி ஐயப்பா நகர், சாந்திநகர், பேட்டை சத்யாநகர், நரசிங்கநல்லூர், கோடீஸ்வரன்நகர், பேட்டை மூசா பள்ளிவாசல் தெரு, பேட்டை பிடிநகர், ஆர்பி முதல் வடக்கு தெரு,  மீனாட்சிபுரம் பிள்ளையார்கோயில் மேலத்தெரு, கைலாசபுரம், சந்திப்பு ரயில்வே குடியிருப்பு, தியாகராஜநரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் 4 பேர் பாதிப்பு, டவுன் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பரவியுள்ளது.

தொற்று அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, குறைந்த பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி கவனிப்பது போன்ற நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மாநகர் 10வது வார்டு ராஜாகுடியிருப்பு பகுதியில் பாதிப்புள்ள வீடுகள் முன் சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் சுகாதார மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி

நெல்லை  மாவட்டத்தில் கடந்த ஆண்டுஜனவரி 16ம்தேதி டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட  முன்களப்பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து  குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் 2ம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. 18  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.  மாவட்டத்தில்  தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த  பட்டியலில் 16,165 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 13,985 பேர்  கோவிஷீல்டும், மற்றவர்கள் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.  இவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைபெற உள்ளது.  அவர்கள் ஏற்கனவே செலுத்திய தடுப்பூசி வகை தற்போது பூஸ்டர் டோஸ்ஆக  போடப்படும். 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  ேபாடுவதற்கான நாள் வந்துவிட்டதா என்பதை மையங்களில் அவர்களது முந்தைய  பதிவுகளை வைத்து கேட்டு தெரிந்துகொள்ளமுடியும்.

Related Stories: